கொரோனா சிகிச்சை அளிக்க மறுத்ததால் போராடி பலியான டாக்டர் !

கொரோனா முன்கள வீரராக இருந்த 50 வயது மருத்துவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்க 3 தனியார் மருத்துவ மனைகளும் மறுத்ததால் அவர் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
கொரோனா சிகிச்சை அளிக்க மறுத்ததால் பலியான டாக்டர்

கர்நாடகா மாநிலம் ரமணாநகர் மாவட்டத்தில் கனகபுரா தாலுக்காவில் உள்ள சிக்கமுடவாடி ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் எஸ் டி மஞ்சுநாத்.
இந்த மருத்துவமனையில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார் மஞ்சுநாத். இந்த நிலையில் மஞ்சுநாத்தின் மாமனாருக்கு கொரோனா வைரஸ் பரவியது. 

இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவர் மரணமடைந்தார். இந்த நிலையில் டாக்டர் மஞ்சுநாத்திற்கும் கடந்த ஜூன் 25-ஆம் தேதி முதல் அதிக காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்து வந்தது. 

அவருக்கு கொரோனாவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பரிசோதனை எடுக்கப்பட்டது.

அவரது பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்த போது தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க முற்பட்ட போது கொரோனா பரிசோதனை முடிவு இல்லாமல் அனுமதி கிடையாது என மறுத்து விட்டனர்.
அது போல் இன்னும் இரு தனியார் மருத்துவ மனைகளுக்குச் சென்ற போது அவர்களும் இதே காரணத்தை கூறி அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 
போராடி பலியான டாக்டர்

இறுதியாக அவர் பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

அவரது 28 நாட்கள் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. கொரோனா பரிசோதனை முடிவுகள் இல்லாமல் எத்தனையோ அரசியல்வாதிகள், 
முக்கிய பிரமுகர்கள் தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு அங்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு அது உறுதியான பிறகு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனால் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவருக்கு ஒரு படுக்கை ஒதுக்க இந்த 3 மருத்துவமனைகள் முன்வராதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags: