வில்லிவாக்கத்தில் 10 ரூபாய் டாக்டர் காலமானார்... மக்கள் சோகம் !

சென்னை வில்லிவாக்கத்தில் பத்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்து வந்த பிரபல டாக்டர் மோகன் ரெட்டி காலமானார். அவரது மரணம் அந்தப் பகுதி மக்களிடையே பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வில்லிவாக்கத்தில் 10 ரூபாய் டாக்டர் காலமானார்

தெறி படத்தில் நடிகர் விஜய் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்ததை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், நிஜ வாழ்க்கையில் பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த மோகன் ரெட்டியை வில்லிவாக்கம் மக்களுத்தான் தெரியும். 
வரும் நோயாளிகளை அன்புடன் அணுகி மருத்துவம் பார்த்தவர். பத்து ரூபாயில் ஆலோசனையும் வழங்கி, சில சமயங்களில் மருந்தும் கொடுத்து முக மலர்ச்சியுடன் அனுப்பியவர்.

மருத்துவமே தனது உலகம் என்று எண்ணிக் கொண்டு இருந்தவர் 84 வயது மோகன் ரெட்டி. கொரோனா காலத்திலும் தன்னிடம் வந்த நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துள்ளார். 

அந்த கொரோனா இவரையும் பாதித்துள்ளது. கடந்த மாதம் 25ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட மோகன் ரெட்டி தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார். 

மீண்டும் தனது மோகன் கிளினிக்கை திறந்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்துள்ளார். இந்த நிலையில்தான் திடீரென சுவாசக் கோளாறு பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 

இந்த செய்தியை அவரது சகோதரர் சி.எம்.கே. ரெட்டி தெரிவித்துள்ளார். நெல்லூரில் 1936ல் பிறந்தவர் மோகன் ரெட்டி. குடூரில் தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். 

பின்னர் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். 
ரயிலேவேயில் மருத்துவராக சிறிது காலம் பணியாற்றிய பின்னர், வில்லிவாக்கத்தில் சொந்தமாக மோகன் என்ற பெயரில் கிளினிக் துவக்கினார். இதில் 30 படுக்கைகள் அமைத்து இருந்தார்.

திருமணம் செய்து கொள்ளாத இவர் வாழ் நாள் முழுவதும் பத்து ரூபாய் பெற்று மருத்துவ சேவை செய்துள்ளார். 

வீட்டுக்கு வாங்க என்று அழைத்தாலும் செல்ல மாட்டாராம். நான் வந்து விட்டால் நோயாளிகளை யார் பார்ப்பார்கள் என்று கேள்வி எழுப்புவாராம். 

எந்த நேரத்தில் வந்தாலும் முகம் சுளிக்காமல் சிகிச்சை அளிப்பாராம். பொது முடக்கத்திலும் தனது பிறந்த நாளில் ஏழைக்களுக்கு உதவியுள்ளார்.

வில்லிவாக்கம் பகுதியில் பல்வேறு அமைப்புகளுக்கு உதவியுள்ளார். நன்கொடை வழங்கி யுள்ளார். இவரது இந்த சேவையைப் பாராட்டி தமிழக முன்னாள் ஆளுநர் கே. ரோசைய்யா கவுரவித்துள்ளார்.
மருத்துவ மனைகளில் சிறிய உடல் உபாதைக்காக சென்றாலும், பணம் பார்த்து விடும் மருத்துவர்கள், மருத்துவ மனைகள் மத்தியில் மோகன் தனிச் சிறப்பு மிக்கவர். 

இவரை இழந்து இன்று வில்லிவாக்கம் மக்கள் சோகத்தில் உள்ளனர்.
Tags: