தமிழகத்தின் நீண்ட இரண்டடுக்கு மேம்பாலம் - சேலம் பாலத்தின் சிறப்பம்சங்கள் !

மொத்தம் 7 கிலோ மீட்டருக்கும் அதிக நீளம் கொண்ட பாலம், தமிழகத்திலேயே மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் என புகழ் பெற்றுள்ளது சேலம் பாலம்.
தமிழகத்தின் நீண்ட இரண்டடுக்கு மேம்பாலம்

சேலம் நகரமா அல்லது, பாலம் நகரமா என்று மக்கள் கேட்கும் அளவுக்கு சேலத்தில் தொடர்ச்சியாக பாலங்கள் கட்டப்படுகின்றன. இது அவசியமும் கூட.
மக்கள் தொகை அடிப்படையில், சேலத்தைவிடவும், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகியவை தமிழகத்தின் மிகப்பெரிய நகரங்களாக இருக்கலாம். ஆனால் சேலத்தின் போக்குவரத்து பிரச்சினை வித்தியாசமானது.

முக்கியமான இடத்தில் சேலம்

நகர மக்களின் போக்குவரத்தை கையாளுவதோடு, பிற மாநிலங்கள், பிற முக்கிய நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தை கையாளக் கூடிய இடத்தில் சேலம் அமைந்துள்ளது. 

கேரளாவிலிருந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு பயணிப்போரும், சரக்கு போக்குவரத்தும் பயன்படுத்தும் சாலையில் அமைந்துள்ளது சேலம். 

இதே போல தமிழகத்தின் கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலங்களி லிருந்து, பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களுக்கு செல்வோரை இணைக்கும் சந்திப்பு புள்ளியும் சேலம் தான்.

ஜெயலலிதா அடிக்கல்
ஜெயலலிதா அடிக்கல்

இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே, புதிய சேவை திட்டத்தின் கீழ் சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, 
ஐந்து ரோட்டை மையப்பகுதியாக கொண்டு இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 

மொத்தம் 7.87 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக மிக பிரம்மாண்டமாக இந்த பாலம் கட்டப்பட்டது.

முதல் கட்ட பாலம்

குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா பூங்காவில் முடியும் பாலம் 5.01 கிலோமீட்டர் நீளம் கொண்டது. 

பாலத்தின் ஒரு பகுதி, ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சந்திப்பு வரை மூன்று கிலோமிட்டர் தூரம் கொண்டது. 

ஏற்கனவே அந்த பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜுன் 7ம் தேதி திறந்து வைத்தார். 
குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான பாலம் கட்டும் பணி அனைத்தும் முடிவடைந்து விட்டதால் இன்று திறக்கப்பட்டது.

தமிழகத்தின் நீண்ட தூர பாலம்
தமிழகத்தின் நீண்ட தூர பாலம்

இந்த பாலத்தின் சிறப்பு என்னவென்றால், மொத்தம் 7.87 கி.மீ தூரம் என்பதால், தமிழகத்தின் மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையை பெற்றது தான். 

பாலத்தின் இரு புறமும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பு வேலியும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டால் சேலம் 4 ரோடு, ஐந்து ரோடு, ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் இல்லாத நிலை ஏற்படும்.

புரட்சி தலைவி அம்மா பாலம்

முதலில், ரூ.320 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்திருந்தார். பின்னர், மேம்பாலம் மதிப்பீட்டு ரூ.441 கோடியாக உயர்த்தப்பட்டது. 
புரட்சி தலைவி அம்மா என்று பாலத்திற்கு முதல்வர் பழனிசாமி பெயர் சூட்டினார். இந்த பாலம் சேலம் மாநகரின் புதிய அடையாளமாக மாறியுள்ளது.
Tags: