கணவர் பணம் தராததால் தற்கொலை.. உயர் நீதிமன்றம் !

வீட்டுச் செலவுக்கு கணவர் பணம் தரவில்லை என்பதற்காக மனைவி தற்கொலை செய்துகொண்டது முட்டாள்தனமானது என உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித் துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி 26.12.2004-ல் உடல் எரிந்த நிலையில் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு பின்னர் இறந்தார். 

அருப்புக்கோட்டை டவுன் போலீஸார் அய்யப்பன் மீது முதலில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். அவரது மனைவி இறந்ததும் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் அய்யப்பனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி 13.9.2006-ல் தீர்ப்பளித்தது.

இந்தத் தண்டனையை ரத்து செய்யக் கோரி அவர், உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில், “மனைவியை நான் கொலை செய்ததற்கு ஆதாரம் இல்லை என்று கூறி, தற்கொலைக்குத் தூண்டியதாக எனக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த வழக்கில் கொலை பிரிவில் தான் என் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்படாத பிரிவில் தண்டனை வழங்கியது தவறு” என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்து பி.தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு:

முதலில் கொலை வழக்கு பதிவு செய்த நிலையில், இறுதியில் வேறு பிரிவின் கீழ் குற்றம் நடைபெற்றது தெரியவந்தால், அந்தப் பிரிவுக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. 

இருப்பினும் இந்த வழக்கில் மனுதாரர் தற்கொலைக்கு தூண்டினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மனுதாரர் மனைவியை கொலை செய்தார் என்றுதான் போலீஸார் கூறியுள்ளனர்.

மனுதாரர் மனைவியின் மரண வாக்குமூலம் நம்பும்படியாக இல்லை. சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள், சம்பவம் நடைபெற்றபோது மனுதாரர் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தார்,

அவரது மனைவியின் மரண ஓலம் கேட்டு வீட்டுக்குள் சென்றார் என தெரிவித்துள்ளனர். இதனால் கொலைக்கு முகாந்திரம் இல்லை. தற்கொலைக்கு தூண்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை.

வீட்டுச் செலவுக்கு கணவர் பணம் தருவது இல்லை. இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது என மனுதாரரின் மனைவி கூறியுள்ளார். இதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டது முட்டாள்தனமானது.

மனுதாரர் தன் மனைவி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என நினைத்து செயல்பட்டார் என்பதற்கு நேரடி ஆதாரம் எதுவும் இல்லை. இதனால் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Tags: