பிராண்டு பிரபலம் ஆகுதா இல்ல பிரபலங்கள் பிரபலம் ஆகுராங்களா? - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

பிராண்டு பிரபலம் ஆகுதா இல்ல பிரபலங்கள் பிரபலம் ஆகுராங்களா?

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
பொது இடங்களில் சினிமா நட்சத்திரம், டிவி ஸ்டார், விளையாட்டு வீரர்களை பார்த்து விட்டால் கை கால் பரபரத்து, 
வேர்த்து விறுவிறுத்து, எண்ணம் கிறுகிறுத்து, மனம் துடிதுடித்து பித்தம் தலைக்கேறி சாமி வந்து

அவர் அருகே ஓடிச்சென்று கை கொடுத்து கொடுத்த கையை அவரே வைத்துக் கொள்ளக் கூடாதா என்று ஏங்கி

அவர் கிளம்பி தலை மறையும் வரை பக்தி பரவசத்தில் பைத்தியக்காரன் போல் பலர் நிற்கிறார்கள் என்பதென்னவோ வாஸ்தவம் தான்.

இது நம் இனத்தின் தலையெழுத்து, இந்த சமுதாயத்தின் சாபக்கேடு ஒழிந்து போய் தொலையட்டும் என்று பார்த்தால்

இந்த பைத்தியக்கார பக்தியை பாத்தி கட்டி சாகுபடி செய்ய ஒரு விளம்பர கூட்டம் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்து வருகிறார்கள்.

பிரபலம் என்றால் பைத்தியமாய் அவர் பின்னால் தொடரும் மக்களை விளம்பரத்தில் நடிக்க வைத்து

அந்த பிரபலம் கொண்டே கவர் செய்து பொருளை விற்கமுடியும் என்று நினைக்கிறார்கள்.

பிரபலத்தை விளம்பரத்தில் பயன்படுத்தும்போது மக்கள் மனதை கவர்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதில் தான் வில்லங்கமே!


மக்களின் கண்கள் பிரபலத்தையே பார்க்கிறது. மனம் அவரிடத்தில்தான் லயிக்கிறது.

விளம்பரத்தி லுள்ள பிராண்ட் கண்ணிற்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் பெரும்பாலான சமயங்களில் மக்கள் மனதில் நிற்பது பிரபலம் தானே ஒழிய பிராண்ட் அல்ல.

முதலில் ஒன்றை தெளிவாக்கு கிறேன். பிரபலங்கள் மீது எனக்கு பிராப்ளம் இல்லை.

அவர்களை பயன்படுத்தி னால் பிராண்ட் பிய்த்துக் கொண்டு பறக்கும் என்று நம்பி பிராண்டை விட்டு பிரபலங்களை விளம்பரம் செய்வது தப்பாட்டம் என்கிறேன்.

பிரபலம் பிரபலத்துவம் பெற்றது ஒரு காரணத்திற்காக. அவர் பிரபலத்திற்கு

உங்கள் பிராண்ட் உதவுகிறது என்றால் தாராளமாக அந்த பிரபலத்தை விளம்பரத்தில் பயன்படுத்துங்கள்.

நடிகைகளின் பிரபலத்திற்கு காரணம் அவர்கள் கவர்ச்சியான அழகு.

அப்பேற் பட்ட நடிகைகளின் அழகு சோப் என்று ‘லக்ஸ்’ கூறும் போது மனதை கவர்கிறது.

பிரபலத்துவத் திற்கு காரணம் இந்த சோப் என்றால் கவர்ச்சியான அழகு பெற விரும்பும் பெண்கள் லக்ஸ் பயன் படுத்தலாம் என்று நம்பி வாங்குவார்கள். 

வாங்குகிறார்கள். இன்றல்ல, நேற்றல்ல. 1956ல் ‘லீலா சிட்னிஸ்’ என்ற நடிகையை லக்ஸ் தன் விளம்பரத்தில் பிள்ளையார் சுழி போட்டு பயன்படுத்தத் துவங்கியது முதல்!

இந்த பிரபலம் பயன்படுத்த மாட்டார் என்று மக்கள் நினைக்கும் பொருளை அவர் கொண்டு விளம்பரம் செய்யும் போது விளம்பரத்தோடு பிராண்டும் புஸ்வான மாகிறது.

‘சச்சின் டெண்டுல் கரை வைத்து ‘விக்டர்’ மோட்டார் பைக் ஒரு முறை விளம்பரம் செய்தார்கள்.

சச்சின் பைக் ஓட்டி பார்த்திருக் கிறீர்களா? தலையில் ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு கிரிக்கெட் ஆடப் போவாரே ஒழிய பைக்கை உதைத்து கிரவுண்டிற்கு போவாரா?

இந்த விளம்பரம் மனதில் எப்படி ஒட்டும்? ஆனால் ‘டிவிஎஸ் ஸ்டார்’ ‘மஹேந்திர சிங் தோனி’யை கொண்டு

விளம்பரம் செய்யும் போது அது கண்ணில் சட்டென்று பட்டு மனதில் பட்டென்று ஒட்டுகிறது.

ஏனெனில் சிறு குழந்தைக்கும் தெரியும் தோனிக்கு பைக் என்றால் கொள்ளை பிரியம் என்று.


அவர் சொன்னால் ஸ்டார் நன்றாகத் தான் இருக்கும் என்று நம்ப முடிகிறது. அவரே ஓட்டுகிறார் என்றால் வாங்கத் தோன்றுகிறது.

இதே போல் ‘ஃபியட் பாலியோ’ டெண்டுல்கரைக் கொண்டு செய்த விளம் பரமும் எடுபடவில்லை.

டெண்டுல்கர் ‘ஆடி’, ‘பிஎம்டபிள்யூ’, ‘பெராரி’ போன்ற விலையுர்ந்த கார்கள் வைத்திருப்பவர்; 

அவர் அதில் பயணிப்பாரா இல்லை தன் ஆடி காருக்கு மாதம் பெட்ரோல் செலவுக்கு ஆகும் விலை கொண்ட பாலியோவில் போவாரா?

பாலியோ போலியோ வந்தது போல் இளைக்காமல் வேறு என்ன செய்யும்!

பிரபலம் பிராண்டிற்கு கிரெடிபிலிடி சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் பிரபலத்துவம் பிராண்டிற்கு பயன்படும்.

பழம்பெரும் நடிகை மனோரமா சமையல் சமாச்சார பிராண்ட் பற்றிச் சொன்னால் கேட்போமா? 

இல்லை ஒரு இளம் நடிகை சொன்னால் கேட்போமா? அந்த இளம் நடிகைக்கு சமையல் அறை எங்கிருக்கும், எப்படி யிருக்கும் என்று தெரியுமா என்று தானே கேட்போம்!

பிரபலங்களை உபயோகிப்பதில் இன்னொரு பிராப்ளம் அவர்கள் நடத்தை.

பிராண்டோடு பிரபலத்தை பின்னிப் பிணைந்து பத்து வருடம் விளம்பரப் படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 

அதன் பின் அவர் ஒரு வேண்டத்தகாத வழக்கில் மாட்டுகிறார் என்றால் அவரோடு சேர்ந்து உங்கள் பிராண்டும் அல்லவா உள்ளே போக வேண்டி யிருக்கும்?


இதெல்லாம் நடக்காது என்கிறீர்களா? ‘Accenture’ என்ற நிறுவனம் உலகமெங்கும்

பல காலம் ‘டைகர் வுட்ஸ்’ என்ற கோல்ப் பிரபலத்தை கொண்டு விளம்பரம் செய்து வந்தது.

இவர் ஒரு பலான மேட்டரில் மாட்டி சந்தி சிரிக்க அவரோடு நிறுவனம் பெயரும் சிக்கி அதிலிருந்து மீண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. 

‘கெண்ட்’ வாட்டர் பியூரிஃபையர் தன் விளம்பரத்தில் உபயோகித்த கிரிக்கெட் பிரபலம் மேட்ச் ஃபிக்சிங் வழக்கில் சிக்கி

சின்னா பின்னப்பட நிறுவனம் அதிலிருந்து தப்பித்து தங்களை பியூரிஃபை செய்ய வேண்டி யிருந்தது!
அனைவரையும் போல் பிரபலங் களுக்கும் ஆளுமை உண்டு. அந்த ஆளுமை பிராண்டிற்கு பொருந்துகிறதா என்று பார்த்து தேர்ந்தெடுப்பது அவசியம். 

பிரபலம் பார்க்க அழகாக இருக்கிறார் என்பதற்காக அவரை வைத்து சிமெண்ட் விளம்பரம் எடுத்தால் எப்படி எடுபடும்?

அப்படி செய்து பட்டுக்கொண்ட சிமெண்ட் பிராண்ட் ஞாபகம் இருக்கிறதா? உங்கள் பிராண்டை வாடிக்கையாளர் எதற்கு வாங்க வேண்டும்,

மற்றவர்கள் அளிக்காத எந்த பயனை நீங்கள் தருகிறீர்கள் என்பதை குறிக்கும் பிராண்ட் பொசிஷனிங்தான் பிரதானம். 

அதை செய்யாமல் பிரபலத்தை கொண்டு பிராண்டை விளம்பரம் செய்தால் வாடிக்கையாளர் வாங்கி விடுவார் என்று நினைப்பது மடத்தனம்.

வேஷ்டி தடுக்கி யாராவது விழுவதை பார்த்திருப்பீர்கள். வேஷ்டி விளம்பரங்களே தடுக்கி விழுவதை டீவியில் தினமும் பார்க்கலாம்.

எதற்கு தன் வேஷ்டியை வாங்க வேண்டும், மற்ற பிராண்டு களுக்கும் தங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லாமல்

நாலு படம் நடித்த பாவத்திற்காக ஒரு நடிகரைப் பிடித்து அவருக்கு வேஷ்டியை வலுக்கட்டாய மாக

கட்டி பத்தாதற்கு கூட ஒரு பத்து பேரை வேஷ்டியோட ஆட வைத்தால் மக்கள் வாங்கிவிடுவார்களா?

இப்பிரபலங்கள் திரைப்படத்தில் வேஷ்டி கட்டியே நாம் பார்ப்பதில்லை.

அவர்களுக்கு ஃப்ரீயாக ஒரு வேஷ்டி தருவதே ஜாஸ்தி, எதற்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து தோல்வியை விலைக்கு வாங்கிக் கொண்டு.


அதை விடுங்கள். எந்த வேஷ்டி விளம்பரத்தில் எந்த பிரபலம் வருகிறார் என்றாவது உங்களால் யூகிக்க முடிகிறதா?

பிரபலத்தை பயன்படுத்துவதில் இன்னொரு வயிற்றெரிச்சல் உண்டு.

பல பிரபலங்கள் வந்தாரை வாழ வைத்து நானும் வக்கனையாய் வாழ்கிறேன் என்று சகட்டு மேனிக்கு விளம்பரப் படங்களில் நடித்துத் தள்ளுவார்கள்.

டீவி போட்டாலே இவர்கள் தோன்றும் விளம்பரங்கள் தான். இந்த மட்டும் டீவியை அணைத்தால் இவர்கள் வருவதில்லை என்று வேண்டு மானால் திருப்தி படலாம்.

ஓவர் எக்ஸ்போஸ்ட் ஆன பிரபலம் எப்படி உங்கள் பிராண்டை தனியாக தெரிய வைக்கப் போகிறார்?

பிரபலங்கள் பிராண்டிற்கு வெறும் பெட்ரோமேக்ஸ் வெளிச்சம் போல. பிராண்டை

வெளிச்சம் போட்டு காட்டி வாடிக்கை யாளரை வாங்க வைப்பது அதன் ஆதார பொசிஷனிங். 

அது தரும் வேல்யூ, அது அளிக்கும் பயன்கள். அந்த வெளிச்சம் தான் பிராண்டை பளிச்சென்று தெரிய வைக்கும்.

அதன் தன்மையை புரிய வைக்கும். வாடிக்கை யாளரை வாங்க வைக்கும். இத்தனை சொல்லியும் பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா!
பிராண்டு பிரபலம் ஆகுதா இல்ல பிரபலங்கள் பிரபலம் ஆகுராங்களா? பிராண்டு பிரபலம் ஆகுதா இல்ல பிரபலங்கள் பிரபலம் ஆகுராங்களா? Reviewed by Fakrudeen Ali Ahamed on 6/25/2016 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚