வாக்களித்த பிறகு ஜெயலலிதா சொன்ன ஒரு வரி....என்ன அர்த்தம்?..சர்ச்சை !

இன்னும் 2 நாட்களில் மக்களின் தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிடும் என்ற ஒற்றை வார்த்தையை முதல்வர் ஜெயலலிதா கூறினாலும், கூறினார், அவரது வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பது குறித்து சீனியர் பத்திரிகையாளர்கள் நடுவே பெரும் விவாதமே எழுந்துள்ளது.
வாக்களித்த பிறகு ஜெயலலிதா சொன்ன ஒரு வரி....என்ன அர்த்தம்?


ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஜெயலலிதா வாக்குப்பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அந்த இடமே, ஒளிவெள்ளத்தால் நிரம்பும் அளவுக்கு, பத்திரிகை கேமராமேன்களால், பிளாஸ் போட்டு புகைப்படங்கள் எடுத்து தள்ளப்பட்டன. 

அதேநேரம், ஜெயலலிதாவின் அருகே சென்று பேட்டியெடுக்க ஜெயா டிவியை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேநேரம், அவர்பேசுவது பிற பத்திரிகையாளர்களுக்கு கேட்க வசதியாக ஒலி பெருக்கி வைக்கப்பட்டிருந்தது. 

அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, பதிலளித்த ஜெயலலிதா, இன்னும் இரண்டு தினங்கள் காத்திருந்தால் மக்களின் தீர்ப்பு என்னவென்று தெரியும் என்று கூறிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டார்.

ரிசல்ட் வரும்வரை காத்திருங்கள் என்று, ஜெயலலிதா கூறியது அனேகமாக இதுதான் முதல்முறை என்றும், இது பதற்றத்தை காட்டுவதாகவும் கூறுகிறார், 'தி வீக்' ஆங்கில இதழின் மூத்த பத்திரிகையாளர் லட்சுமி. 


ஜெயலலிதாவின் உடல் மொழி மிகவும் பதற்றத்தோடும், பலவீனமாகவும் இருந்ததாகவும், இது, தோல்விக்கான அறிகுறி என்றும் கூறுகிறார் சிஎன்என்-ஐபிஎன் சேனலின் துணை ஆசிரியர் ஜக்கா ஜேக்கப். 

இது ஒருபுறம் இருக்க, 2 நாள் காத்திருங்கள் என்று கூறியது, வெயிட் அன்ட் சீ என்ற பேச்சின் பொருளில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது என்கிறார்கள் வேறு சில சீனியர் பத்திரிகையாளர்கள். 

வெற்றி உறுதியாகிவிட்டது என்ற தகவலை அறிந்ததால்தான், பொறுத்திருந்து பாருங்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார் என்கிறார்கள் அவர்கள்.