தஞ்சாவூரில் தள்ளிப்போனது தேர்தல் ஏன்? பரபரப்பு தகவல் !





தஞ்சாவூரில் தள்ளிப்போனது தேர்தல் ஏன்? பரபரப்பு தகவல் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு பதிலாக, இன்றையதினம், 232 தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில், 
இன்று வாக்குப்பதிவை நடத்தாமல் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம். அரவக்குறிச்சியில் அதிமுக மற்றும் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.சி.பழனிச்சாமி ஆகியோர் நேருக்கு நேர் மோதுவதால், அத்தொகுதியில் பண மழை பொழிந்தது. 

போதாத குறைக்கு, கரூரில் அன்புநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேநேரம், தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பாக அஞ்சுகம் பூபதியும், அதிமுக சார்பாக ரெங்கசாமி உட்பட மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர். 

பண பட்டுவாடா குறித்து வெளியுலகத்திற்கு பெரிதாக தெரியாத இந்த தொகுதியில் ஏன் தேர்தலை ஒத்திவைத்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்கி இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டள்ள தகவல்களில் இதுகுறித்த தகவல் உள்ளது. 

அதில் கூறியிருப்பதாவது: 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தஞ்சாவூர் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு ஏராளமான பணம், பரிசுப் பொருள்கள் மற்றும் பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டன. தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் மூலம் தொகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டது.

மே 13ம் தேதி தஞ்சாவூரில் உள்ள முத்து லாட்ஜில் அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ. 5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்து பணத்தை கட்டுவதற்கான பல 'ரப்பர் பாண்டுகள்' கண்டுப்பிடிக்கப்பட்டன. 

லாட்ஜின் உரிமையாளர் மகன் சரவணன் கைது செய்யப்பட்ட நிலையில், மனோகர் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அருகேயிருந்த மற்றொரு லாட்ஜிலும் சோதனை நடத்தப்பட்டு ரூ. 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மே 14ம் தேதி தொகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்ற ஒரு காரைச் சோதனை செய்தபோது, அதிலிருந்து அதிமுகவின் துண்டுப் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. 

காரிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களிலிருந்து தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 13 வார்டுகளில் உள்ள வாக்காளர்களுக்கு ரூ. 500 வீதம் ரூ. 1.40 கோடி வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆவணங்களை எல்லாம் வைத்து பரிசீலனை செய்து பார்த்தால், ஒரே வேட்பாளர் மட்டுமே தஞ்சாவூர் தொகுதியில் ரூ.6 கோடி வரை பணம் விநியோகித்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், 21 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதான் தேர்தலை தள்ளி வைக்க காரணம் என்று கூறப்படுகிறது. 

மற்றொரு தகவல் என்னவென்றால், திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியதாகவும், எனவே, ஆளும் கட்சி சார்பில், தேர்தலை நிறுத்தும் நோக்கில் தங்கள் தொடர்புகளை பயன்படுத்தி, தேர்தலை நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags: