கொள்கைளால் ஈர்க்கப்பட்டு மாநில தலைவராக உயர்ந்தவர் !

அப்பாவும் சித்தப்பாவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக இருக்க... காங்கிரஸ் பாரம்பரியம் உள்ள குடும்பத்தில் பிறந்தும் பாஜகவின் கொள்கைளால் ஈர்க்கப்பட்டு, 
அக்கட்சியில் இணைந்து இன்று மாநில தலைவராக உயர்ந்துள்ளார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.இவர் மகப்பேறு மருத்துவர், இலக்கியவாதி, சமூக ஆர்வலர், 

அரசியல்வாதி என்று பல்வேறு தளங்களில் தனக்கென முத்திரை பதித்தவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 2-6-1961 ல் தமிழிசை காங்கிரஸ் பாரம்பரியம்மிக்க குடும்பத்தில் பிறந்தார். 

இவரது தந்தை குமரி அனந்தன் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவராக பதவி வகித்துள்ளார்.பாஜக விதிகளின்படி, மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் மாநிலத் தலைவர் உள்ளிட்ட கட்சிப்பொறுப்புகளை வகிக்க முடியாது என்பதால், 

பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராகவே, அவருக்கு பதிலாக தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பாஜகவின் புதிய தலைவராகநியமிக்கப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் மீண்டும் தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். 

மருத்துவர் குடும்பம் 

மகப்பேறு மருத்துவரான தமிழிசை, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.பட்டமும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டி.ஜி.ஓ. பட்டமும்,கனடாவில் மருத்துவப் பயிற்சியும் பெற்றவர். 

இவரது கணவர் டாக்டர் சௌந்தரராஜன், சென்னைபோரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இருவரும் மருத்துவர்கள். 

பேச்சாளர் 

பெண் சக்தி இயக்கம் என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தலைவராக உள்ள பொற்றாமரை இலக்கிய அமைப்பின் செயலாளராகவும் இருந்து வருகிறார்.இவர் சிறந்த பேச்சாளரும் ஆவார். 

மாணவப் பருவத்திலேயே 

அரசியல் பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்த தமிழிசைக்கு பள்ளி பருவத்திலேயே அரசியல்ஆர்வம் இருந்தது. காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், பாஜகவின்கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அந்த கட்சியில் இணைந்தார். 

பாஜகவில் பொறுப்பு 

15 ஆண்டுகளாக பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வரும் இவர், அக்கட்சியில் மாவட்ட, மாநிலமருத்துவ அணிச் செயலாளர், மருத்துவ அணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், மாநிலப் பொதுச்செயலாளர், மாநில துணைத் தலைவர், தேசியச் செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். 

பெண் தலைவர் 

2014 ஆகஸ்ட் முதல் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.2019ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார். பாஜகவில் உள்ள மாநிலத் தலைவர்களில் தமிழகத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டுமே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேர்தல் களத்தில் 

1999ம் ஆண்டு முதல் பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வரும் தமிழிசை, 2006, 2011 சட்டசபை தேர்தல்களிலும், 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

தன் வழி தனி வழி 

தந்தை குமரி அனந்தன் காங்கிரஸ் முன்னாள் தலைவர். சித்தப்பா வசந்தகுமார் காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு தலைவர் என காங்கிரஸ் பாரம்பரியத்தின் பின்னணி குடும்பத்தைச் சேர்ந்தாலும், தனது வழியில் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் தமிழிசை செளந்தரராஜன். 

இன்றைய அரசியல்வாதி 

பாஜகவில் மாநில தலைவராக இருந்தாலும் அனைத்து கட்சியினருடனும் நட்பு பாராட்டி வருகிறார். தன்னைப் பற்றி விமர்சனம் செய்பவர்களைக் கூட கடுமையாக பேசாமல் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, அரசியலில் தன்னுடைய பாணி தனி என்று நிரூபித்து வருகிறார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்.
Tags: