ராஜநாகம் | Kingcobra !

உலகில் கிட்டத்தட்ட 2,900 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் 10 செ.மீ. நீளம் கொண்ட ‘நூல்’ பாம்பு முதல் 28 அடி நீளம் கொண்ட ‘அனகோண்டா’ பாம்பு வரை வகை வகையாய் இருக்கின்றன.

இந்த பாம்பு இனங்களுள், ஒரேயோர் இனம் மட்டும்தான் பறவைகளைப் போல் கூடு கட்டி முட்டை இட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கும். அந்த பாம்பினத்தின் பெயர் ராஜநாகம். 

இந்த வகைப் பாம்புகள் இந்தியா, மலேசியா, தென்சீனா, வியட்நாம் போன்ற நாடுகளிலும், தெற்கு ஆசியப் பகுதிகளிலும், வடக்கு ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும் காணப் படுகின்றன.

இவற்றிலும் 200 இனங்கள் உள்ளன. இவை மற்ற பாம்பு களைவிட புத்திசாலிகள். இவற்றின் கண்பார்வை மிகக் கூர்மையானது. 330 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளைக்கூட தெளிவாக பார்க்கமுடியும்.

இரவிலும் இதன் பார்வை படு தெளிவு. ராஜ நாகம் எப்போதும் மற்ற பாம்புகளையே உணவாக உட்கொள்ளும். அப்படி பாம்புகள் கிடைக்காத போது, ஓணான், அணில், பறவைகள் போன்றவற்றை உண்ணும்.

ராஜநாகங்களில் ஆண், பெண் இரண்டுமே இணைவதற்கு முன்பு ஒருவிதமான புனுகு வாசனையை வெளிப்படுத்துகின்றன.
 
இதுவே நாகப்பாம்பு என்றால் உளுந்து வாசனை வரும். இந்த வாசனையை வைத்துதான் கிராமப்புறங்களில் பாம்பு இருப்பதை கண்டுபிடித்து விடுகிறார்கள்.

ராஜநாகங்களில் ஆண், பெண் இணைசேர்ந்த பின்பு 2 மாதம் கழித்து பெண் முட்டையிடும். அந்த முட்டைகளை அடைகாப்பதற்காக இலை, செத்தை, மரக்குப்பைகளை சேர்த்து கூடு கட்டும். 

அதன்பின்பு அடை காக்கும். ஆண் பாம்பு, பெண்பாம்புகளையும், முட்டைகளையும் பாதுகாக்கும். 60-90 நாட்களில் குஞ்சுகள் வெளிவரத் தொடங்கும். அவை 50 செ.மீ. நீளம் இருக்கும்.
முட்டையில் இருந்து குஞ்சுகள் வந்ததும் தாய் விலகி விடும். குஞ்சுகள் தன்னந்தனியாக சுயமாக வளரும். இந்த குஞ்சுகளின் விஷம் கூட பெரியப் பாம்புகளின் விஷம் போலவே வீரியமாக இருக்கும்.

ராஜநாகம் சாதாரணமாக 18 அடி நீளம் வளரக்கூடியது. நுனிவாலை மட்டும் தரையில் பதித்து நேராக நிமிர்ந்து 6 அடி உயரத்துக்கு எழுந்து நின்று, மனிதனை ஆட்டம் காண வைக்கும் வல்லமை அதற்கு உண்டு.

உலகிலேயே கொடுமையான விஷம் கொண்ட பாம்புகளில் இதுவும் ஒன்று. 20 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியது. சாதாரணமாக மனிதனைப் பார்த்ததும் பயந்து ஒதுங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.

 சீண்டினால் நேருக்கு நேராக எதிர்த்து தாக்கும் தன்மைக் கொண்டது. இது ஒருமுறை கடித்தால் 7 மி.லி. விஷத்தை செலுத்தும். அது 20 மனிதர்களைக் கொல்ல போதுமானது.
ஒரு யானையையும் கொல்லும். விஷம் நேரடியாக மைய நரம்பு மண்டலத்தை தாக்கும். முதலில் கண் பார்வை மங்கும், தலை சுற்றி பக்கவாதம் ஏற்படும்.

இதய ரத்தக் குழாய்கள் சிதைந்து, கோமா நிலை ஏற்படும். மூச்சுத் திணறி மரணம் ஏற்படும்.

ராஜநாகம் கடித்தால் அதிகபட்சமாக 15 நிமிடங்கள் வரை உயிர் இருக்கும். இது கடித்தவர்களில் 80 சதவீதம் பேர் மரணத்தையே தழுவியிருக்கிறார்கள். அத்தனை கொடிய விஷம் கொண்டது இது.
Tags: