சொந்த ஊரிலேயே வாழ விரும்புகிறோம்: இக்லாக் குடும்பம் உருக்கம்!

பக்ரீத் பண்டிகையன்று மட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒரு வதந்தி. அது தீயாக பரவ ஒரு முதியவர் அடித்தே கொல்லப்படுகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரி மாவட்டத்தில் பிசோதா எனும் கிராமத்தில் இச்சம்பவம் நடந்து 10 நாட்கள் நகர்ந்துவிட்டன.
 இக்லாக்கின் மூத்த சகோதரர் ஜமீல் அகமது | படம்: பிடிஐ
தங்கள் கண்ணெதிரிலேயே முகமது இக்லாக் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் என்றென்றைக்கும் மனதை விட்டு நீங்காது என்று கூறும் அவரது குடும்பத்தினர் 'நடந்த சம்பவங்களை மறப்பது கடினம்; ஆனாலும் இங்குதான் வாழ விரும்புகிறோம்' என்பதில் மட்டும் உறுதியாக இருக்கின்றனர். 

தாத்ரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முகமது இக்லாக்கின் குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி டெல்லிக்கு இடம் பெயர்ந்ததாக நேற்று (வியாழக்கிழமை) பரவலாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் இதை அக்குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். தி இந்து (ஆங்கிலம்)வுக்கு அக்குடும்பத்தினர் பேட்டி அளித்துள்ளனர். 

சர்தாஜ் (29) இவர் இக்லாக்கில் மகன். சென்னையில், இந்திய விமானப் படைப் பிரிவில் பணியாற்றி வருகிறார். நடந்த சம்பவங்கள் குறித்து அவர் கூறும்போது, "என் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது. 

 

காலத்தால் அழியாத காயங்களுடன் வாழ்வதைப் போன்றது அது. பிசோதா கிராமத்தில் உள்ள என் வீட்டை நினைத்தாலே என் தந்தைக்கு நேர்ந்த அவலம் மட்டுமே நினைவுக்கு வருகிறது. 

ஆனால், அதையும் தாண்டி அந்த வீட்டுடன் தொடர்புபடுத்திக் கொள்ள எங்களுக்கு சில நல்ல நினைவுகளும் இருக்கின்றன. அதே வீட்டில்தான் என் அப்பாவுடன் நான் மகிழ்ச்சியாக வளர்ந்தேன். 

அத்தகைய இடத்தை நாங்கள் எப்படி ஒரேயடியாக விட்டுவிலகுவோம். இப்போதைக்கு எங்கள் கிராமத்தில் நிலைமை சரியில்லை. அதனால் தேவைப்பட்டால் ஓரிரு மாதங்களுக்கு கிராமத்தில் இருந்து வெளியேறலாம். 

 ஆனால், ஒருபோதும் கிராமத்தை விட்டு நிரந்தரமாக வெளியேற மாட்டோம். நடந்த சம்பவங்களை மறப்பது கடினம். ஆனாலும், எங்களிடம் என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு இதே கிராமத்திலேயே தொடர்ந்து வாழ்வோம்" என்றார். 

 

இக்லாக்கின் சகோதரர் ஜமீல் கூறும்போது, "5 தலைமுறைகளாக நாங்கள் இங்குதான் வசிக்கிறோம். அப்படி இருக்கையில் திடீரென்று இந்த இடத்தைவிட்டு வெளியேறுவது சாத்தியமில்லை. 

நாங்கள் எங்கள் இடத்தைவிட்டு எங்கும் செல்லவில்லை; செல்வதாகவும் இல்லை. ஆனால், ஊடகங்கள் ஏனோ உறுதிப்படுத்தப்படாத தகவல்களை தொடர்ந்து பரப்பி வருகின்றன" எனக் கூறினார். 

இந்நிலையில், கவுதம புத்தர் நகரின் மாவட்ட நீதிபதி நாகேந்திர பிரசாத் கூறும்போது, "இக்லாக் குடும்பத்தினர் பிசோதா கிராமத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு எங்கும் செல்வதாக இதுவரை தெரிவிக்கவில்லை" என்றார். 

நீதியை நிலைநாட்டுவேன்: 

இக்லாக்கின் மகன் சர்தாஜ் தனது தந்தையின் படுகொலைக்கு தகுந்த நீதி பெறும் வரை ஓயமாட்டேன் எனக் கூறுகிறார். "என் பாட்டியும், எனது தங்கையும் அன்றைய சம்பவ அதிர்ச்சியில் இருந்து இன்னும் சற்றும் மீளவில்லை. 

 

எங்களது உலகம் முன்புபோல் இல்லை. ஆனால், அதை மீட்டெடுப்போம் என நம்புகிறேன்" என்று உருக்கமாக கூறினார் சர்தாஜ். 
Tags: