காஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை கூடாது.. ஹபீஸ் சயீத் !





காஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை கூடாது.. ஹபீஸ் சயீத் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
காஷ்மீர் பிரச்னையை தவிர்த்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை கூடாது என்று பாகிஸ்தான் பிரதமருக்கு ஜாமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மிரட்டல் விடுத்துள்ளார்.
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத்.

இவர், பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின், தாய் அமைப்பான ஜமாத் உத் தவாவின் தலைவர்.

ஹபீஸ் சயீத்தை, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன. ஹபீஸ் சயீத், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார்.
ரஷ்யாவில் பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேசியதை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்டிருந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே தடைபட்டிருந்த பேச்சு வார்த்தை தூதரக மட்டத்தில் மீண்டும் துவங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச சமூகத்தினரின் அழுத்தத்துக்குட்பட்டு காஷ்மீர் குறித்த பிரச்னை இடம்பெறாமல் இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் நடத்தக்கூடாது என்று ஹபீஸ் சயீத், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஹபீஸ் சயீத் கூறும்போது, ''இந்தியாவுடன் ஒரு தலைபட்சமான நட்புறவு குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நினைக்க கூடாது.
இதுபோன்று மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காஷ்மீர் மக்களை காயப்படுத்தும். காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்துக்கு பாகிஸ்தான் ஆட்படக்கூடாது.

காஷ்மீர் பிரச்னை குறித்த தனது முதன்மை கொள்கையில் பாகிஸ்தான் உறுதியாக இருக்க வேண்டும். காஷ்மீர் மக்களை தவிர்த்து பாகிஸ்தான், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
Tags: