ரம்ஜானில் நோன்புக் கஞ்சி செய்யும் முறை !

மற்ற மாதத்தின் பெயர்களை நினைவில் வைத்திருக்கின் றார்களோ இல்லையோ ரமழான் மாதத்தின் பெயரை முஸ்லீம்கள் அனைவரும் நினைவில் இருந்தி இருப்பார்கள்.
ஏனெனில் அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, தர்மங்களை அதிகமதிகம் வழங்கி, மாத இறுதியில் ஈகைத் திருநாளைக் கொண்டாடுவார்கள். நோன்பு கஞ்சி என்பதும் ரமழான் என்றதும் நினைவுக்கு வரும்.
நோன்பு வைத்த ஏழைகள் நோன்பு திறக்கும் நேரத்தில், உணவுக்கு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தமிழகத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி இலவசமாக தர ஏற்பாடுகள் பல ஆண்டுகளாக உள்ளன. அதே போல் பள்ளிக்கு வருபவர்களுக்கும் நோன்பு கஞ்சி தந்து நோன்பை முடித்துக் கொள்ள உதவி செய்யப்படும்.

சிறு வயதில் நோன்பு இருக்கும் காலங்களில், நோன்பு கஞ்சி குடிப்பதற்காக பள்ளிவாசல்களுக்கு சென்ற காலம் உண்டு. மண் கலயங்களில் நொன்பு கஞ்சி ஊற்றி, அதற்குள் ஒரு பேரீச்சம் பழத்தை இட்டு, கலயத்தில் ஓரத்தில் புதினா சட்னியும் வைத்திருப்பார்கள்.

சிறுவர்களுக்கு கடைசியில் தான் தருவார்கள். அதுவும் பாதி தான் தருவார்கள்.... ஏனெனில் வயிறு நிறைந்து போய், அதையே குடிக்க இயலாமல் வைத்து விடுவார்கள்.

கொஞ்சம் பெரிதானதும் நோன்பு கஞ்சி சப்ளை செய்யும் இளைஞர் அணியிலேயே இடம் கிடைத்தது. அப்போதும் ஜாலியாக இருக்கும். நோன்பு திறப்பதற்கு முன் பரபரப்பாக கஞ்சி ஊற்றுவது, சட்னி வைப்பது, பேரீச்சம் பழம் கொடுப்பது என பிஸியாக இருப்போம்.

 சில நாட்களில் கஞ்சி பற்றாக்குறை காரணமாக எங்களுக்கே கிடைக்காது. ஆனாலும் அதுவும் ஒருவித மகிழ்ச்சியாகவே இருக்கும்.


சென்னைக்கு சென்ற போது இனி ரமழானில் நோன்பு கஞ்சி கிடைக்காது என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே பெரிய பள்ளிவாசல் இருந்தது. ரமழான் மாதம் முழுவதும் சூடான நோன்பு கஞ்சி கிடைத்தது.

துபாய்க்கு பிளைட் ஏறும் போதும் அதே நிலை தான்... அரபுகள் இருக்கும் நாட்டிற்கு செல்கின்றோம் என்ற நினைவுடன்... சென்று பார்த்தால் நிறுவனத்தில் 90 சதவீதம் தமிழர்களே...

அப்புறம் என்ன அங்கும் நோன்பு கஞ்சி சப்ளையில் இறங்கி விட்டோம்.. ஆனால் வெளிநாடு அல்லவா? ஸ்பெஷலாக வடை, பஜ்ஜி, கேரா மில்க சூஸ், கடல் பாசி என அமர்க்களமாக இருக்கும்.

சவுதியில் வந்த போது நிறுவனம் ஒரு பிரெஞ்ச் பாணி நிறுவனம்... இருக்கும் 600 பேரில் 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்... (2006) ரமழான் மூன்றில் தான் அங்கு சென்று சேர்ந்தேன். ’அம்புட்டு தான்டா நோன்பு கஞ்சி’ என்று இருந்த வேளையில், அங்கும் அமர்க்களமாக நோன்பு கஞ்சி கிடைத்தது.

தமிழ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பில் தினமும் தமிழக ஸ்டைல் நோன்பு கஞ்சியுடன் இப்தார் கிடைத்தது. இப்போது அங்கு தான் சங்கமம்... இறைவனின் கிருபையால்... :)

இனி நோன்பு கஞ்சி தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம். இது சைவ உணவு தான்... சூடாக அருந்தினால் சுவையாக இருக்கும். உடம்பை குளிர்ச்சியாக வைக்க உதவும்... வீடுகளில் செய்து மாலை நேரங்களில் அருந்தலாம்... :)

தேவையானப் பொருட்கள்

அரிசி - ஒரு கப்

கடலை பருப்பு - கால் கப்

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

கோதுமை குருணை - கால் கப்

பெரிய வெங்காயம் - ஒன்று

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 5

மல்லித் தழை - 2 கொத்து

புதினா - 2 கொத்து

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி (தேவைக்கேற்ப)

தேங்காய் - ஒரு மூடி

பட்டை - ஒன்று

கிராம்பு - 4

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

ஊரவைத்த ஜவ்வரிசி அல்லது சேமியா - சிறிதளவு கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம் (added by adiraixpress)

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும்.

கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும்.

2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும்.

எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும்.

அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும். பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம்.

இடையிடையில் திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடவும். நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும்.

தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். மேலே கொத்தமல்லி தழையினைத் தூவவும்.
Tags: